Find us on Google+ இணையத் தமிழன்: ஜல்லிக்கட்டு நமது உரிமை !!! அது மட்டும் போதுமா?

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Wednesday, January 18, 2017

ஜல்லிக்கட்டு நமது உரிமை !!! அது மட்டும் போதுமா?


தன்னெழுச்சியாக தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டங்கள், பெரும் மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. அரசியல் சாயமின்றி, வன்முறையின்றி அமைதி வழியில் போராடிக்கொண்டிருக்கும் , மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பெருமிதத்துடன் தலைவணங்குகிறேன்.

தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக லண்டன், கனடா, ஆஸ்திரேலியா,ஈழம், அமெரிக்கா, சிங்கப்பூர்,வளைகுடா நாடுகள் என உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகள் ஒரே குரலாய் ஒன்றிணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

ஜல்லிக்கட்டு வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல. தமிழரின் வீரத்தையும், விவசாயத்தின் மேலும் , விவசாயத்திற்கு உறுதுணையாயிருக்கும் கால்நடைகளின் மேல் கொண்ட நன்றியையும் பறைசாற்றும் நிகழ்வு. பன்னெடுங்காலமாக தமிழரின் வீர மரபு.

ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு / ஏறுதழுவல் நமது உரிமை , எவர் தடுத்தாலும் அதை விடோம். 



ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாயிருக்கும் 'விலங்குகள் நல அமைப்புகளின்' போர்வையில் இருக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க அவசர சட்டம் நிறைவேற்ற முனையாத மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராகவும் போராடும் அதே வேளையில், தமிழர்கள் முன் இருக்கும் ஒரே பெரிய பிரச்சனை 'ஜல்லிக்கட்டு தடை' மட்டும் தானா ?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினால் மட்டும் போதுமா ?

ஒவ்வொரு விவசாயியின் மரணமும், விவசாயத்தின் மரணம்.விவசாயிகளின் தற்கொலையை உதாசீனப்படுத்தும், இவற்றை தற்கொலை என்று அங்கீகரிக்கக்கூட மறுக்கும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக போராட வேண்டும்.

இயற்கையின் கருணையை மட்டுமே நம்பி, உலகிற்கே உணவு கொடுக்கும் தலையாய உழவும், உழவர்களும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். இயற்கை பொய்த்தது, கை கொடுக்க வேண்டிய அரசாங்கம் கை விட்டது , வாங்கிய கடனை  அடைக்க வழியில்லாமல், தன்னுயிரையே மாய்த்துக்கொல்லும் விவசாயிகளை காப்பாற்ற போராட வேண்டும். 


பல ஆண்டுகளாய் இம்மண்ணை மலடாக்கி, விவசாயிகளை கடனாளிகளாக்கிய செயற்கை ரசாயனங்களுக்கு எதிராக போராட வேண்டும்.    

பசுமை புரட்சி எனும் பெயரில், செயற்கை ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தியும், அவற்றை ஊக்கப்படுத்தியும், கோடி கோடிகளை கொள்ளையடிக்கும் செயற்கை ரசாயன நிறுவங்களையும் அதற்க்கு ஆதரவான அரசையும் எதிர்த்து போராட வேண்டும். விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும். மறைந்த வேளாண் விஞ்ஞானி 'நம்மாழ்வார்' அவர்கள் கற்பித்துச்சென்ற வழிமுறைகளை கடைபிடித்து, சிக்கிம் போன்ற மாநிலங்களை முன்னோடியாய் கொண்டு, இம்மண்ணில் இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்

நீர் ஆதாரங்களை அழிக்கும் அநீதிக்கு எதிராக போராட வேண்டும் 

ரசாயன சாயக்கழிவுகளை மறுசுழற்சி செய்யாமல் , அப்படியே நீர்நிலைகளில் விட்டு , அனைத்து நீர் ஆதாரங்களையும் நச்சுத்தன்மையாக்கும் முறைகேடான தொழிலதிபர்களிடமிருந்தும், பசாசுரன்களைப்போல ஆற்று நீரை உறிஞ்சி உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கோலா நிறுவன எமன்களிடமிருந்தும் நீராதாரங்களை மீட்க போராட வேண்டும்.


மணல்,கனிம வள கொள்ளையர்களுக்கு எதிராக போராட வேண்டும் 

ஆறுகளின் மணல் வளங்களை பறித்து, ஏரி ,குளம்,கண்மாய், என ஆறுகளின் நீர்வழி தடங்களை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் மணல் கொள்ளையர்களிடமிருந்தும், ரியல் எஸ்டேட் முதலைகளிடமிருந்தும் அவற்றை மீட்க போராட வேண்டும். உலகிற்கே நீர் மேலாண்மையில் முன்னோடியாயிருந்த தமிழர் , மீண்டும் தன் நீர் வளங்களை மீட்டெடுக்க வேண்டும். 


கல்வியை வியாபாரமயமாக்கிய கொள்ளையர்களுக்கு எதிராக போராட வேண்டும்

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவருக்கு, கல்வியை இலவசமாக வழங்காமல், அரசு பள்ளிகளை மூடி, தனியார் கல்வி நிறுவனங்கள் பெறுக வழி வகுத்த அநியாயத்திற்கு எதிராக போராட வேண்டும்.  கல்வியை அனைவருக்கும் பொதுவானதாகவும், போதுமானதாகவும் வழங்க அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும்.  

மருத்துவ கொள்ளைகளுக்கு எதிராக போராட வேண்டும் 

மருத்துவத்தை வியாபாரமாக்கி,  தனியாருக்கு தாரை வார்த்து ,ஏழைகளுக்கு மருத்துவ உதவியை மறுக்கும் மனித நேயமற்ற, கொடுமைகளுக்கு எதிராக போராட வேண்டும். போலி மருந்துகளிடமிருந்தும், மருத்துவமனைகளிடமிருந்தும், உணவின் வழியே தமிழனை நோயாளியாக்கி , அதில் கொள்ளை லாபமாக்கும் சூழ்ச்சிகளிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டும்.   

விழித்தெழு தமிழா, உனக்கான உரிமைகளை உனதாக்கிக்கொள் !!!
தமிழர் ஒற்றுமை ஓங்குக !!!  
நாளைய வளமான தமிழகம் உன் கையில்.

0 Comments
Tweets
Comments

Popular Posts