Find us on Google+ இணையத் தமிழன்: திருவண்ணாமலை - கிரிவலம் : பயண அனுபவம்

Pages

Creative Commons License
இணையத் தமிழன் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Sunday, December 7, 2014

திருவண்ணாமலை - கிரிவலம் : பயண அனுபவம்

நவம்பர் 29, 2014 


திருவண்ணாமலை - சிவ தலங்களில் முக்கியமான ஊர் . மலையே சிவலிங்கமாக வணங்கப்படும் ஆன்மீக பூமி இது .திருவண்ணாமலை பற்றி பல முறை கேட்டும் படித்தும் இருந்தாலும், அங்குள்ள அண்ணாமலையார் கோவிலுக்கோ, கிரிவலத்திர்க்கோ செல்லும் வாய்ப்பு இத்தனை வருடமாக ஏனோ அமையவில்லை.இந்த வருடம், கார்த்திகை தீபத் திருவிழா வுக்கென  கொடி ஏற்றம் நிகழ்ந்த அன்று திருவண்ணாமலை செல்வதென்று தீர்மானித்தேன். எப்போது செல்வது, எப்படி செல்வது என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை. ஆனால் இந்த வார விடுமுறையிலேயே செல்ல வேண்டும் என்று மட்டும் உறுதியாயிற்று.   

பயணம் :

வெள்ளியன்று இரவு வெகு நேரமானதால் , அடுத்த நாள் சனிக்கிழமை பகலில் 12 மணியளவில் ஓசூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் கர்நாடக அரசு பேருந்தில் பயணம் ஆரம்பமானது.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை இடையே மோசமான சாலை வசதி பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும், அந்த கொடுமையை நேரில் அனுபவித்தால் தான் தெரியும் ,அந்த வழி எவ்வளவு மோசமானது என்று . முழுதாக ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு கூட ஒழுங்கான ரோடு கிடையாது . பல்வேறு இடங்களில் ரோடே கிடையாது. கொத்தி, கிளறி விடப்பட்ட சரளைக் கல்   ரோட்டிலும் சளைக்காமல் படுவேகமாக விரைந்து செல்கின்றன வாகனங்கள்.  வயதானவர்கள் , உடல்நிலை சரியில்லாதவர்கள்  இந்த வழியினை தயவு செய்து தவிர்த்திடுங்கள். 

ஒரு நாள் செல்வதற்கே இவ்வளவு கஷ்டம் என்றால், அங்கு வசிக்கும் மக்களின் நிலைமை ரொம்ப கஷ்டம். பள்ளி செல்லும் பிள்ளைகள் பாடு ரொம்பவே திண்டாட்டம் தான். மண் புழுதியில், தினம் தினம் ஆபத்தான பயணத்தை  மேற்கொள்கின்றனர். எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மிக மோசமான சாலைகளிலேயே இது முக்கியமானது ?! 

ஆனால் வழிநெடுக பச்சை பசேலென மரங்களும், வயல்களும் மனதுக்கு இதம் தருகின்றன. சுட்டெரிக்காத இதமான் சூரிய வெளிச்சம், இதமான காற்று. இன்னமும் வெள்ளந்தியாய் இருக்கும் கிராம மக்கள் என்று அருமையான அனுபவம் . 

சாமல்பட்டி ரயில்வே கேட்டில், சிக்னலுக்காக நின்றிருந்த நேரத்தில் , கொய்யா,சீதாப்பழம், பனங்கிழங்கு, மக்காச்சோளம்  என்று பல காய் கனிகளை பதம் பார்த்தோம் . 

ஓசூர் - கிருஷ்ணகிரி - மத்தூர் - ஊத்தங்கரைசெங்கம் - ஆகிய ஊர்களை தாண்டி திருவண்ணாமலை வந்தடைய 4 மணி நேரம் ஆயிற்று .

அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன் திருக்கோயில் :

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே அண்ணாமலையார் திருக்கோவில் வருகின்றது. கோவிலுக்கு நேரடியாக செல்ல விரும்புகிறவர்கள் அங்கேயே இறங்கிக் கொள்ளலாம். இல்லை என்றால் பேருந்து நிலையத்திலிருந்து நடந்தோ ( சுமார் 1.5 கி .மீ ), ஆட்டோவிலோ  கோவிலுக்கு செல்ல வேண்டும் .

உலகப் புகழ் பெற்ற சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்று திருவண்ணாமலை . பிரம்மாவும்,  பெருமாளும  சிவனின் அடியும், முடியும் காண முடியாத அளவிற்கு ஜோதிப்பிழம்பாய் சிவன் காட்சி தந்த இடம் திருவண்ணாமலை.  



எல்லா சிவன் கோவில்கலளுக்கும் உரித்தான பொதுவான அமைப்புகளே இங்கும் உள்ளது. கோவிலின் முகப்பில் உள்ள ராஜ கோபுரம் மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது. கார்த்திகை தீபத்தை ஒட்டி கோவிலை அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

ராஜ கோபுரம் 


ரமணர் அவர்கள் தங்கி தவமிருந்த பாதாள லிங்கமும் , அவர் வாழ்ந்த காலத்திய புகைப்படங்களும் ஆச்சர்யப்படுத்துகின்றன. அண்ணாமலையாரின் சன்னதி அருமையாக அமைந்திருக்கிறது . அண்ணாமலையாரின் சன்னதியை ஒட்டியே அமைந்திருக்கிறது உண்ணாமுலை அம்மன் சன்னதி. நாங்கள் சென்றிருந்த போது , அம்மனை தரிசிக்க தான் கூட்டம் அலைமோதியது.



கோயில் பிரகாரத்தில் இருக்கும் குளத்தை சுற்றி கம்பி வேலி போட்டு அடைத்திருந்தனர் , எனவே குளக்கரைக்கு செல்ல முடியவில்லை.சிவனடியார்கள் 64 நாயன்மார்கள் அனைவருக்கும் தனித்தனியே சிறு தேர்கள் தயாராகிக்கொண்டிருந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள தேரடி வீதி கலகலப்பாக இருந்தது. அனைவரும் தேரோட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நாங்களும் அண்ணாமலையார் தரிசனம் முடித்துக்கொண்டு , கிரிவலம் செல்ல கிளம்பினோம்.

கிரிவலம் :            

ல ஊர்களில் கிரிவலம் சென்றாலும், திருவண்ணாமலை கிரிவலம் மிக பிரசித்தி பெற்றது. மலையே சிவலிங்கமாக  வழிபாடுக்குரியது இதன் சிறப்பு .மலையை சுற்றி 14 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டும். வழி நெடுக நூற்றுக்கனக்கான கோவில்கள் மடங்கள், ஆசிரமங்கள், காப்பகங்கள் உள்ளன. அருமையான இந்த கிரிவலத்தில் ஒரே நெருடலாயிருப்பது நூற்றுக்கணக்கில் பிச்சைக்காரர்கள், வயதானவர்கள் உட்பட பலர் "தர்மம்" கேட்டு அமர்ந்திருக்கிறார்கள். அத்தனை வயோதிகர்களை அந்த நிலைமையில் பார்க்க சங்கடமாய் இருக்கின்றது.

கோவிலிலுள்ள பாதாள லிங்கத்தில் ஆரம்பித்து ,
இந்திர லிங்கம் ,
அக்னி லிங்கம்,
எமலிங்கம்,  
நிருதி லிங்கம்,
வருண லிங்கம்,
வாயு லிங்கம், 
குபேர லிங்கம், 
ஈசானிய லிங்கம்
என பல லிங்கங்கள் அமைந்துள்ளது.
பெரும்பாலும் பக்தர்கள் இரவு நேரத்தில் , காலணி எதுவும் அணியாமலேயே செல்கின்றனர்.    

கிரிவல பாதையில் "ரமணரின் ஆசிரமம்" அமைந்துள்ளது. பல வெளிநாட்டவர்கள் இங்கே தங்கி அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர் . யோகி ராம் சுரத் குமார் அவர்களுக்கு ஒரு மண்டபமும் உள்ளது. உலக புகழ் பெற்ற ?? நித்யானந்தாவின் ஆசிரமம் (என்னும் பெயரில் ,கோட்டை போன்ற மதில் சுவர்   கொண்ட மர்ம இடம் )  உள்ளது.  

14 கிலோமீட்டரை இடைவெளி இல்லாமல் சுற்றி வர 3 1/2 மணி நேரமானது. "ஓம் நமச்சிவாய " என்று மந்திரம் ஓதியபடி சென்ற சித்தர் போன்ற தோற்றமுடைய ஒருவரை பார்க்க முடிந்தது.  தடை எதுவும் இன்றி நிம்மதியாக திருவண்ணாமலை தரிசனமும் , கிரிவலமும் சென்றது மிகவும் திருப்தியான அனுபவம். நீங்களும் கண்டிப்பாக ஒருமுறை சென்று வாருங்கள்!  
  
0 Comments
Tweets
Comments

Popular Posts